Published Date: October 18, 2025
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

ஸ்டார்ட் அப் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும் வகையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் 'ஏஐ இன்னவேஷன் ஹப்' தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில் நுட்ப கருத்தரங்கு:
இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் கோவையில் நடைபெற்ற ஏஐ தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் நிறைவு நாளில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய (ஸ்டெம்) துறைகளில் தேசிய அளவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 18 முதல் 20 சதவீதம் ஆகும்.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான வழிமுறைகளுடன் ஒருங்கிணைந்த 'ஸ்டார்ட் அப்' சூழ்நிலை உருவாகி வருகிறது. காப்புரிமை பெறுவது முதல் ஆய்வு வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரத்தியேக நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஏஐ தொழில்நுட்பம் மறுசீரமைப்பு காரணமாக அடிப்படை பணிகளுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் உதவியுடன் திறமையாக பணியாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கான சான்றாக ஏஐ கல்வி அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.
ஏஐ இன்னவேஷன் ஹப்:
கோவை மாவட்டத்தில் மட்டும் 1592 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் 2 லட்சம் சதுர அடி பரப்பில் ஏஐ இன்னவேஷன் ஹப் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் பிரஜித்திரா நவ்நீத், செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
மேலும் ஏஐ துறையில் திறன் மற்றும் போட்டியை எதிர்கொள்ள உதவும் வகையில் தமிழ்நாடு அரசும் (சிஐஐ) அமைப்பும் இணைந்து ஏஐ அகாடமியையும் தொடங்கி உள்ளனர்.
Media: Dinamani